அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குங்கள் – சத்தியலிங்கம் கோரிக்கை

நாட்டில் ஊழல் அற்ற அரச நிர்வாக முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல்மயமாக்கல் மிகவும் முக்கியமானதென தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விஞ்ஞானம் , தொழிநுட்பம் தொடர்பான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் இன்று (11.03) இடம்பெற்ற நிலையில்
இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டிஜிட்டல் மயமாக்கல் என்பது நவீனபொருளாதாரத்தின் அடித்தளமாகும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நவீன டிஜிட்டல் மயமாக்கலில் கண்ணால் பணத்தை பார்க்காமலேயே கொடுக்கல்வாங்கல் நடைபெறுகின்றது. காரணம்
வங்கி நடைமுறைகளில் ஏற்பட்ட டிஜிட்டல் புரட்சியே. டிஜிட்டல் முறைமையானது பாதுகாப்பானது, விரைவானது, நேரவிரயமற்றது, சிக்கனமானது.
ஊழலற்ற நிர்வாக நடைமுறையை ஏற்படுத்தும் இலங்கையில் குறிப்பிட்ட சிலதுறைகள் ஏற்கனவே டிஜிரல்மயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா திட்டத்தில் முக்கிய அங்கமாக டிஜிட்டல் மயமாக்கல் உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2025ம் ஆண்டுக்கான பாதீட்டில் 21.8 பில்லியன் ரூபா டிஜிட்டல் மயமாக்கலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
இதில் 7.1 பில்லியன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சிற்கும், 14.7 பில்லியன் ஏனைய அமைச்சுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் சமூகநலன்புரி ஆகிய துறைகளில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க ஏற்பாடுகளை செய்வதனூடாக சபைகள் தமது சொந்த வருமானத்தில் கிடைக்கின்ற நிதியிலிருந்து கிராமிய அபிவிருத்தியை செய்துகொள்ள முடியும். இதுவே நிலைபேறான அபிவிருத்தியாகும். இதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் வருமான மூலங்களான சொத்துவரி அறவீடு, வருமான வரி அறவீடு என்பவற்றை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும்.

அத்துடன் இன்றும் எமது மாவட்டங்களில் நகரசபை, பிரதேச சபைகளில் ஆதனவரியை செலுத்துவதற்கு நேரடியாக சென்றே கருமபீடத்தில் பணம் செலுத்தவேண்டியுள்ளது. வங்கி முறைமைகள் போன்று வரிசெலுத்தும் முறைகளை டிஜிட்டல் மயப்படுத்தினால் பொதுமக்கள்
தங்களின் கைத்தொலைபேசியில் இருந்தே வரியை செலுத்தக்கூடியாதாக இருக்கும்.

இதே போன்று இலங்கையில் அரச நிர்வாக துறைகளில் மிகவும் தாமதமாக இயங்குகின்ற ஒரு துறையென்றால் அது காணி நிர்வாகம்தான். சில காணிப்பிரச்சனைகளை தீர்க்க 20-25 வருடங்கள் செல்கின்றது. இதனால் காணி உரிமையாளரின் இறப்புச்சான்றிதழை சமர்ப்பித்து
காணி உரிமத்தை பெற்றுக்கொள்ளும் அவல நிலை காணப்படுகின்றது. எனவே முன்னுரிமை அடிப்படையில் காணிநிர்வாகம் சார்ந்த துறையில் டிஜிட்டல் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தி விரைவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இலங்கையில் அதிகம் வீதிவிபத்துக்கள் மூலம் தினமும் பலர் உயிரிழக்கின்றார்கள், பலர் அங்கவீனமாகின்றார்கள்.
இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக மக்கள் பின்பற்றாமை முக்கியமான காரணமாகும்.
இதற்கு பொதுமக்கள் மட்டும் காரணமல்ல. போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பொலிசார் அதனை சரியாக நடைமுறைப்படுத்தாமையுமே.

வீதி விபத்துக்களை மீறுவோரிற்கு எதிராக அறவிடப்படும் தண்டப்பணம் செலுத்தப்படும் முறைமை இங்குள்ள பாரிய பிரச்சனையாகும்.
போக்குவரத்து பொலிசார் விரும்பினால் மட்டுமே தண்டப்பணம் அறவீடு செய்யமுடியும்.
அல்லது வாகன ஓட்டுனருக்கும் கடமையில் உள்ள பொலிசாருக்கும் இடையில் நடைபெறும் பேரம்பேசல் விதிமுறைகளை மீறியவர்கள் இலகுவாக தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ள வழிவகுக்கின்றது.
அனைத்து பொலிசாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.

வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளது போன்று வீதிகளின் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.
விதிமீறுவோருக்கு எதிராக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபடுவோரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படல்வேண்டும்.

மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் நோயாளிகள் தொடர்பான தரவுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படாமையால் அவற்றினை சேகரித்து வைப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு வைத்தியசாலையில் பல ஆயிரம் ரூபா செலவில் செய்யப்படும்
மருத்துவப்பரிசோதனை அந்த நோயாளி பிறிதொரு வைத்தியசாலைக்கு செல்லும்போது மீண்டும் செய்யவேண்டியுள்ளது.
எனவே நோயாளி தொடர்பான தரவுத்தளம் இருந்தால் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலிருந்தும் விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்” என்றார்.

Social Share

Leave a Reply