தேஷபந்துவின் ரிட் மனு தாக்கல் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதிகள் முகமது லஃபர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தேஷபந்து சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிபதியின் கைது உத்தரவு சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதாக வாதிட்டார்.

இருப்பினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஹோட்டல் உரிமையாளரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வெலிகம ஹோட்டல் நடவடிக்கையின் பின்னணியில் தேஷபந்து தென்னகோன் மூளையாக செயற்பட்டார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மாத்தறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய உண்மைகளை தேஷபந்து மறைத்ததை மேற்கோள் காட்டி, மனுவை நேரடியாக நிராகரிக்குமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply