இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கமைய வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் 50,000 20mg/2ml Furosemide ஊசி மருந்து தொகுதி இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் நேற்று (13.02) நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் குறித்த மருந்து தொகுதி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்கே, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் தெதுனு டயஸ் மற்றும் இலங்கை அரசின் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட தட்டுப்பாடுளின் போதும், அதேபோல நெருக்கடி நிலை ஏற்பட்ட காலப்பகுதிகளிலும் இலங்கைக்கு நம்பத்தகுந்த நண்பனாக இந்தியா செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதியான 2020 மே மாதத்தில் விசேட விமானம் ஒன்றின் மூலமாக இந்தியாவால் 25 தொன் மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டமை, 2021 ஜனவரியில் 500000 கொவிசீல்ட் தடுப்பூசி அன்பளிப்பு, 2022 பெப்ரவரியில் 1 இலட்சம் அன்டிஜன் சோதனை தொகுதிகள் அன்பளிப்பு போன்றவையும் இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகளில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் 2022 பெப்ரவரியில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்துக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒரு வருட காலப்பகுதிக்காக 2022 மார்ச்சில் வழங்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக 2024 மார்ச் வரை அக்கடனுதவி நீடிக்கப்பட்டது.
மேலும் பேராதனை பல்கலைக் கழக மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை, உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் காணப்பட்ட மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2022 ஏப்ரல்-மே காலப்பகுதியில் 26 தொன்களுக்கும் அதிகமான மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களில் சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவமிக்க இடம் வழங்கப்பட்டுள்ளது.