ஐந்து வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறோம் இருப்பினும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை, நாங்கள் பட்டதாரிகளாக இருந்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். என மன்னார் மாவட்ட ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (08.09) திங்கட்கிழமை, காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைதி வழியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்த வேளையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்கள்,
“கடந்த 2020 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டு பாடசாலைகளிலே நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களாக இணைக்கப்பட்டோம்.
இந்நிலையில் 5 வருடங்களாக,இன்று வரை நாங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற நியமனத்திலேயே ஆசிரியர் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் .
கடந்த அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு இன்று வரை நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொள்ளவில்லை.
நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். அவர்களைச் சிறந்த பெறுபேறுகளைப் பெறச் செய்கிறோம்.அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையிலேயே நாங்கள் ஆசிரியர்களாகச் சகல கடமைகளையும் மேற்கொள்கிறோம்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தைக் கற்றுத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களுக்கு கூட இலங்கை அரசு நிரந்தர நியமனத்தை வழங்கி யுள்ளது.
நாங்கள் பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்கள். ஐந்து வருடங்களாக ஆசிரியர் சேவையினை மேற்கொண்டு பயிற்சிகள் பெற்றுள்ள போதிலும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது .
நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்களை வழங்கக் கோரியே இன்றைய தினம் மன்னார் மற்றும் மடு வலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகிய நாங்கள் ஒன்று இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்றனர்.
ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் குறித்த கவன ஈர்ப்பு போராட்டமானது தேசிய ரீதியாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.