நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. குழு நிலைப் போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும், ஓட்ட நிகர சராசரி (Net Run Rate) குறைவாக இருந்ததே இலங்கை அணியின் வெளியேற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
குழு சுற்றில் இலங்கை அணி மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வி என்ற பெறுபேறுடன் 6 புள்ளிகளை பெற்றது. வெற்றி–தோல்வி கணக்கில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவுஸ்திரேலியா அணியிடம் முதல் சுற்றில் சந்தித்த கடுமையான தோல்வி, அணியின் ஓட்ட நிகர சராசரியை கடுமையாக பாதித்தது. அந்த போட்டியின் ஓட்ட நிகர சராசரி வேகம் மற்றும் புள்ளிகள் இரண்டாம் சுற்றில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக, இலங்கை அணியின் NRR -0.113 ஆக பதிவானது. இரண்டாம் சுற்றில் விளையாடிய போட்டிகள் இரண்டையும் இலங்கை அணி வெற்றி பெற்றது.
அதே குழுவில், அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் குழுவின் முதலிடத்தை உறுதி செய்தது. அந்த அணியின் ஓட்ட நிகர சராசரி +1.950 ஆக இருந்து, போட்டிகளில் அவர்கள் காட்டிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளை , ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி என இலங்கை அணியுடன் சமமான 6 புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்களின் ஓட்ட நிகர சராசரி +1.725 ஆக உயர்வாக இருந்தது. இதன் மூலம் அவர்கள் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இவ்வாறு, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் புள்ளிகளில் சமமாக இருந்த போதிலும், ஓட்ட நிகர சராசரியில் ஏற்பட்ட வித்தியாசமே இலங்கை அணியின் அரை இறுதி கனவுக்கு தடையாக அமைந்தது.
இந்த முடிவு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்கால தொடர்களில் ஆரம்ப போட்டிகளில் ஏற்படும் பெரிய தோல்விகள் அணியின் முன்னேற்றத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.