மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவிடம் பணம் பெற்றுக்கொண்டு பிணை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் இடைத்தரகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையானதாக கூறப்படும் இருவர் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, கேசல்வத்தை பொலிசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னதாக அந்த இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைத்து, பிணை செயல்முறை குறித்து மேலும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்த கபில சந்திரசேன, மே 08 அன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.