கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி

இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு – தலைவர் யோஹேய் சசகாவா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் விசேட சந்திப்பு

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் (The Nippon Foundation / Sasakawa Foundation) தலைவர் யோஹேய் சசகாவா (Mr.Yohei Sasakawa) ஆகியோருக்கிடையில் விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த 02ம் திகதி டோக்கியோவில் நடைபெற்றது.

பல தசாப்தங்களாக இலங்கையுடன் நெருங்கிய நட்புடன் செயற்பட்டுவரும் நிப்போன் பவுண்டேஷன் ஊடாக, இலங்கையின் கடற்றொழில், கடல்சார் விஞ்ஞானம் மற்றும் கடல்வள மேலாண்மைத் துறைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, உலக கடல்சார் பல்கலைக்கழகம் (World Maritime University) ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் உயர்கல்வி மற்றும் உதவித்தொகை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு சசகாவா இணக்கப்பாட்டை தெரிவித்தார்.

கடற்றொழில் துறைக்கு மேலதிகமாக, இலங்கையின் பொதுவான அபிவிருத்திக்காக நிப்போன் பவுண்டேஷன் ஆற்றும் பாரிய பங்களிப்பிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, வட மாகாணத்திலுள்ள 100 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் ஆதரவையும், இலங்கையிலிருந்து தொழுநோயை (Leprosy) ஒழிப்பதற்காக குறித்த அறக்கட்டளை வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும் அமைச்சர் இங்கு பாராட்டினார்.

அரிசி உற்பத்தியில் இலங்கையைத் தன்னிறைவு அடையச் செய்வதற்குத் தேவையான ஒரு தனித்துவமான விவசாயத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சசகாவா அமைச்சருடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

யோஹேய் சசகாவா அடுத்த வாரம் இலங்கைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன்போது இலங்கையில் புதிதாகக் கட்டப்பட்ட கலாசார நிலையமொன்றையும் திறந்து வைக்கவுள்ளார். இலங்கைக்கும் நிப்போன் பவுண்டேஷனுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply