நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுப்போம். இலவசக் கல்வியின் ஊடாகக் கல்வியையும் பட்டத்தையும் பெற்ற இவர்கள், தங்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்ட போதிலும், இதுவரை அவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படவில்லை. அரச சேவையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையான ஆட்சேர்ப்புப் பரீட்சை, சமமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் கூட இதுவரையில் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பட்டத்திற்கு ஏற்ற பதவிகள் இல்லாமை மற்றும் பட்டத்தை விடக் குறைந்த தகைமைகளைக் கொண்டவர்கள் இப்பட்டதாரிகளைக் கண்காணிக்கும் நிலை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அநீதிக்கு எதிராகத் நான் முன்னிற்பேன். பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பெயர் பொருத்தமற்றது எனக் கூறி, அது ‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்’ என மாற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இவர்கள் ஏமாற்றப்பட்டதே இதில் பாரிய சோகம் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அன்று தேர்தல் காலத்தில் நான் உண்மைகளைப் பேசினேன். அதனை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று இந்த அரசாங்கம் இப்பட்டதாரிகளைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றியுள்ளது. இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றவர்கள் கூட இன்று இப்பட்டதாரிகளை மறந்துவிட்ட போதிலும், இவர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது குறித்து அவதானத்தை திருப்புவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்று (16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களின் 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் வரையான சேமிப்புகளுக்கு 15% வட்டி வழங்கப்பட்ட போதிலும், அதுவும் தற்போது பறிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விதை மற்றும் உரங்களுக்கான மானிய விலை மற்றும் உத்தரவாத விலைகளும் இன்னும் வழங்கப்பட்ட பாடில்லை. ஒவ்வொரு விவசாயியும் கடுமையான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பொய்களைக் கூறி மக்களை அரசாங்கம் திசைதிருப்பியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வளங்களும் சலுகைகளும் கூடக் குறைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள இத்தருணத்தில், ஏப்ரல் மாதத்தில் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,000 ரூபா போதுமானது எனக் கூறப்பட்டு வருகின்றன. நாடும் மக்களுமே இவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். 30 நாட்கள் வாழ்வதற்கு இந்த 17,000 ரூபா போதுமானதா என்று மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் தமக்குச் சாதகமான வெகுஜன கருத்தை உருவாக்குவதற்காக, சூசகமாக தமக்குச் சார்ப்பான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி காய்நகர்த்தி வருகின்றனது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் மந்தபோசணம் அதிகரித்துள்ளதுடன், வறுமையும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்குத் துறைமுகத்தில் தரையிறக்கப்படும் இறக்குமதி விலைக்கு ஏற்ப எரிபொருட்களை பெற்றுத் தருவோம் என்றனர். இன்று அது எதுவும் நடந்தபாடில்லை. ஊழல், மோசடிகளை ஒழிப்போம் என்றனர். அதுவும் நடக்கவில்லை. மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவும் போதிலும், வரிகளைக் குறைத்து எரிபொருட்களைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளன. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிய போதிலும், அதுவும் நடந்தபாடில்லை. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என பிரஸ்தாபித்தனர். கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொய்களைக் கூறி ஜனாதிபதி பதவியையும் 2/3 பெரும்பான்மையையும் பெற முடிந்தாலும், இந்தப் பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை. பொய்கள் இருப்புக் கொள்ளாது. நான் உண்மையைப் பேசி வீட்டிற்குச் சென்றேன், பொய் சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து 220 இலட்சம் மக்களையும் ஏமாற்றிவிட்டனர். இப்போது நாட்டிற்கு காணப்படும் மாற்று வழி என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியே மக்களுக்காக உண்மையாகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.