ரஞ்சனை சந்தித்த எம்.பிக்கள்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று (20/12) இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதங்களில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொடர்ச்சியாக முழந்தாளில் ஏற்பட்டு வந்த உபாதை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு வெலிக்கடை மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இன்று மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்று ரஞ்சன் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “ரஞ்சன் என்பவர் சிறையில் இருக்க வேண்டிய ஒரு நபர் அல்ல. அவர் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர். அவர் நாட்டையும் நாட்டு மக்களையும் இதயப்பூர்வமாக நேசித்தார். அவரது விடுதலைக்காக பலமுறை ஜனாதிபதியிடம் கோரியிருந்தோம்.

மக்களின் உரிமைகளுக்காக அவர் எதனையும் மறைக்காமல் வெளிப்படையாக கதைத்தவர். இன்று நாட்டில் சீனி கொள்ளை, தேங்காய் எண்ணெய் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர். ஆனால் சமூகத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.

நான் ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளேன். ரஞ்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி நல்ல தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

நீதிமன்ற அவதூறு வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை நாட்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரை விடுவிக்க கோரி கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தியினர் இணைந்து நாடளாவிய ரீதியில் விடுதலைக்கான கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி திட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவும் ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். எனினும் அவரது விடுதலைக்கான உத்தரவு ஜனாதிபதியினால் இதுவரை வழங்கப்படவில்லை.

ரஞ்சனை சந்தித்த எம்.பிக்கள்

Social Share

Leave a Reply