நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை குறித்து நாட்களை அனுமானித்துக்கொண்டு, அச்சப்பட்டுக் கொண்டு இருக்கத் தேவையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எண்ணெய் கொள்வனவு மற்றும் டொலர் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (21/01) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அதுகுறித்து தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், எண்ணெய் கொள்வனவின் போது, சில வேளை 80 நாட்களுக்கான எண்ணெயை களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது. அதனை களஞ்சியப்படுத்தி அத்தனை நாட்களுக்கு வைப்பதற்கான இடமுமில்லை. இதுவொரு டைனமிக் ஒப்பரேஷன். ஆகவே ஒருநாள், இரண்டு நாள் , மூன்று நாள் என்றவாறே எண்ணெய் நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
எனவே நாட்களை கணக்கெடுத்துக்கொண்டு உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றை அனுமானிக்கத் தேவையில்லை எனவும், அதனை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் 8 நாட்களுக்கு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 8 நாட்களுக்கு அடுத்த எண்ணெயை கொள்வனவு செய்ய முடியும். ஆகவே அதுகுறித்து குழப்பமடைய தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
அத்துடன் துறைமுக கொள்கலன்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில கொள்கலன்கள் வேறு சில காரணங்கள் காரணமாகவே சிக்கியுள்ளன. பணம் காரணமாக சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு நாம் மேலதிக டொலர்களை வழங்கியுள்ளோம். ஆகவே அந்த பிரச்சினை இதில் தாக்கம் செலுத்த முடியாது. பால்மா விலையை அதிகரிக்க முடியாததால் சிலர் அதனை இறக்குமதி செய்யாதிருந்தனர். அதனாலேயே பால்மாவுக்கு தட்டுபாடு நிலவியது. இப்போது அந்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையாகவுள்ள பால்மா பொருட்களும் நாட்டிற்குள் விரைவில் வரும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை வங்கிகளின் கொள்கை வட்டிவீத்தை 0.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டிவீதமும் அதிகரிக்கப்படவுள்ளது. பணவீக்கத்தின் காரணமாக வெளிநாட்டு நாணயத்துறையிலுள்ள அழுத்துங்களை கருத்தில் கொண்டு, இவ்வாறு வட்டி வீதத்தை அதிகரித்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
