அரச வங்கிகள் தொடர்பில் நிதியமைச்சர் அலி சபிரி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அறிக்கையை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) வன்மையாக கண்டிப்பதோடு, அரச வங்கிகள் மீதான எவ்விதமான தலையீடுகளையும் சங்கம் கடுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
இரண்டு அரச வங்கிகளும் சீர்குலைந்தமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் வங்கிகளுக்கு மீளச் செலுத்துவதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சங்கம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியவாறு தற்போதைய அரசாங்கத்தினால் அரச வங்கிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருசில ஊழல் நிறைந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்”.
“2020ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.” என்றும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
“அனைத்து வகையான அரசியல் தலையீடுகளையும் சங்கம் நிராகரிப்பதோடு, அரச வங்கிகளின் பங்குகள் விநியோகம் உள்ளிட்ட எந்தவிதமான தலையீடுகளுக்கும் எதிராக முன்னறிவித்தல் ஏதுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு சங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.