முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை கைது செய்யுமாறு மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டு சகலரையும் உடனடியாக கைது செய்யுமாறு வழக்கறிஞர் சேனக்க பெரேரா இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாகவும் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டமை மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தமை ஆகியவற்றுக்காக கைது செய்யுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(13.05) மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி திலின கமகே, பிரதான மேல் நீதிமன்றத்தில் 17 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிர்மன்னே, சனத் நிஷாந்த, மொரட்டுவ மாநகரசபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன ஆகியோர் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
