முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் புகலிடம் கோரினார் என வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என இலங்கை வந்துள்ள மாலதீவுகள் முன்னாள் ஜனாதிபதியும், சபாநாயகருமான மொஹமட் நஷீட் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
“தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுக்காப்பாக தங்குவதற்கு ஒரு விலாவை ஏற்பாடு செய்து தருமாறு தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அவ்வாறான செய்திகள் பொய்யானவை எனவும், அதில் எந்த உண்மை தன்மையும் இல்லை எனவும், தான் தற்போதைய விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவில்லை” எனவும் மாலைதீவுகள் சபாநாயகர் மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், மாலைதீவுகளுக்குமான உறவினை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகவும், அவ்வாறான சக்திகளே இந்த செய்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்த மொஹமட் நஷீட் இவ்வாறான போலி செய்திகள் கவலையளிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்தபோதும் நாட்டின் தற்போதைய சூழலை மாற்றி நாட்டை முன்னேற்றுவது தொடர்பிலேயே பேசியதாகவும், வேறு எந்த விடயங்களையும் பேசவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொஹமட் நஷீட் இலங்கையின் வெளிநாட்டு உதவிகளுக்கான இணைப்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மாலத்தீவுகள் செல்ல உதவி கேட்டது போலியான செய்தியென நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்திருந்திருந்தார்.
