21 ஆம் திருத்த சட்டத்துக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன, சட்டத்துறை மற்றும் சட்ட சீர்த்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
சமர்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களில் தமது கட்சி சில பரிந்துரைகளை செய்வதாக அவற்றையும் குறிப்பிட்டு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் 21 ஆம் திருத்த சட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதன் காரணமாக தாம் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி தாம் தயாரித்து வழங்கிய 21 ஆம் திருத்த சட்டத்தை நீத்து போக செய்ய சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், தற்போது வழங்கப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாம் ஒரு போதும் இந்த திருத்த சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் எனவும், விரைவில் தமது கட்சியினால் புதிய சட்ட வரைபு வழங்கப்படுமெனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நநிலையில் தமது கட்சி எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லையெனவும், நாளை (30.05) ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள சந்திப்பின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெரிவித்துள்ளார். அத்தோடு தமது கட்சியின் சட்ட வல்லுனர்களிடம் தற்போதைய வரைபு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் ஆலோசனையின் படி மேலதிக பரிந்துரைகள் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்ற பிரதிநிதித்துவமற்ற அரசியல் கட்சிகளோடு இந்த சட்ட சீர்திருத்தம் தொடர்பில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர்களது கருத்துக்களும், ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்துக்குள் பொது அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனனங்கள், தொழிற்சங்கங்கள் போன்றவர்களோடும் சந்திப்புகளை நடாத்தி இந்த சட்ட அமுலாக்கம் தொடர்பில் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாகவும், அதற்கான அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
