தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்ட விரோதமானதென உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை சட்ட வரைபின் 99 A மீறப்பட்டுள்ளதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினது மாவாட்ட வேட்பாளர்கள் பட்டியலிலோ அல்லது தேசிய பட்டியலிலோ அவரது பெயர் இல்லாத நிலையில் அவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது சட்டத்துக்கு முரணானதென தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நியமனம் மூலம் இலங்கை சட்ட வரைபின், மக்களின் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் , ஆகியவற்றை உள்ளடக்கிய 10 ஆம் சரத்து, சட்டத்தின் சம பாதுகாப்புக்கான உரிமை சட்ட வரைபு 12(1), உத்தரவாதம் அளிக்கப்பட்ட இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுதல் சட்டம் 10, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளடங்கிய அரசியலமைப்பின் 14(1)(a) ஆகிய சட்டங்கள் மீறப்பட்டுளளதாக மேலும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அந்த நிலையத்தின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பெரும் தோட்ட துறை, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மின் உற்பத்தி துறை, நுகர்வோர் பொருட்களை சந்தைப்படுத்தும் துறை போன்றனவற்றுடன் ஈடுபடுமொருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தது பக்கச்சார்பானது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஈடுபடும் ஒருவரை, 91(1)(e) சட்டத்தின் மூலமாக பதவி நீக்கம் செய்ய முடியுமென்பதையும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, தம்மிக்க பெரேராவின் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது, முற்றிலும் நியாயமற்றது, சட்டத்திற்கு முரணானது எனவும், இது சீர் செய்யப்படாவிட்டால், இலங்கை மக்களுக்கும், சட்டத்துக்கும், ஆட்சிக்கும் பாரதூரமான மற்றும் சீர்செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை, தவறான முன்னுதாரணமாக அமையுமெனவும் ,மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.
