இலங்கையில் மதுபானத்துக்கான கேள்வி அல்லது கொள்வனவு 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலை, மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது நிதிக்கான பாராளுமன்ற குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரப்ரியதர்ஷன யாப்பா இந்த தகவலை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான இந்த கூட்டம் அரச அமைப்புகளது அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள், வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள், மதுவரி திணைக்கள அதிகாரிகள், சுங்க திணைக்கள அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சிக்கல்கள், மதுபான தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதன் காரணமான மட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புகள், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்கள் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு பொருளாதார வீழ்ச்சியும், குடும்பங்களது வருமான வீழ்ச்சியும் இந்த மதுபான விற்பனை வீழ்ச்சிக்கு காரணங்கள் என மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி திணைக்களத்தின் வருமான வீழ்ச்சிகள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷா டி சில்வா, காவிந்த ஹெஷான் ஜயவர்தன ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
