எரிபொருள் கப்பல் மேலும் தாமதம் – அமைச்சர்

இன்று, நாளை எரிபொருள் கப்பல் வருமென்ற அறிவிப்பு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எரிபொருள் வரும் தினம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு, விநியோகஸ்தர்கள் உரிய திகதியினை சரியாக கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

வங்கி மற்றும் இறக்குமதி ஆவணங்கள் தொடர்பிலான தாமதம் காரணமாக கப்பல் வருகை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த எரிபொருள் கப்பல் வருகை தரும் வரை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் வரும் வாரம் எரிபொருள் வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார். எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாமென மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரிசையில் நின்றாள் மட்டுமே எரிபொருள் கிடைக்குமென்ற நிலையில், வரிசையில் நிற்கவேண்டாம் என்ற அறிவித்தலை அமைச்சர் தொடர்ச்சியாக விடுத்தது வருகின்றார். இதன் உண்மை அர்த்தம் என்ன என்பது அவருக்கே விளக்கம்.

இந்த வாரம் எரிபொருள் இலங்கைக்கு வராது என்ற தகவல்களை ஐக்கிய தொழிற் சங்க பேச்சாளர் தெரிவித்து வந்த நிலையில் வரும் வாரம் வருகை தருவதும் சந்தேகம் என்ற கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான பேச்சுகளும் காணமல் போயுள்ளன.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தொடர்ந்தும் அவர்களால் இயன்றளவான எரிபொருட்களை வழங்கி வருகிறது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு உரிய எரிபொருள் நிலையங்களுக்கே அமைச்சர் கூறியது போன்று மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடைபெறும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

புதிய விநியோகஸ்தர்களுடன் வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள அமைச்சர், தாமதத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

எரிபொருள் நிலைவரம் தொடர்பில் செய்திகளை அநேகமான ஊடகங்கள் பொறுப்புடன் தெரிவித்து வருகின்றன. ஊடகங்களில் வெளி வரும் செய்திகள் மூலமாகவே மக்கள், நுகர்வோர் தகவல்களை பெற்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஒரு சிலர் ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதனாலேயே மக்கள் வரிசைகளில் நிற்பதாகவும், இல்லாவிட்டால் பெற்றோலுக்கு வரிசை ஏற்பட்டிருக்காது என்றும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் இட்டதனை அவதானிக்க முடிந்தது.

வி மீடியா பொறுப்பான ஊடகமாக உறுதி செய்யப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. தகவல்கள் மூலமாக கறுப்பு சந்தை உருவாகியுள்ளது, எரிபொருளை பதுக்கி வைத்துள்ளார்கள் என பொது வெளியில் கூறுபவர்கள், சரியான முகாமைத்துவம் செய்யப்படவில்லை என குறை கூறுபவர்கள், சமூக பொறுப்புடன் ஏன் அந்தந்த பகுதி நிர்வாகத்தினருக்கு, அல்லது காவற் துறைக்கு தெரிவிக்கவில்லை என கேள்வியினை வி மீடியா முன் வைக்கின்றது. இவ்வாறானவர்களினாலேயே குற்றங்கள் அதிகரிக்கின்றன என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த தகவல்கள் மூலமாகவே மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் தினங்களை அறிந்து தங்கள் பயணங்கள், வேலைகளை திட்டமிட்டு செய்ய முடிகிறது. வரிசைகள் தொடர்பில் அறிய முடிகிறது. இலங்கையின் அநேகமான ஊடகங்கள் எரிபொருள் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து வருவதாக வி மீடியா நம்புகிறது.

உண்மையில் குறை கூறும் நபர்கள் ஊடங்களை குறை கூறுவதிலும் பார்க்க இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் தொடர்பில் சிந்திப்பது நன்று.

எரிபொருள் கப்பல் மேலும் தாமதம் - அமைச்சர்

Social Share

Leave a Reply