உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்தார்.

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில் அந்த திட்டங்கள் மீள்வடிவமைக்கப்படும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் ஷெர்வோஸ் (Faris Hadad-Zervos) தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டிய பிறகு உலக வங்கியின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வோஸ் அவர்கள் தெரிவித்தார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (29.06) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய ஜனாதிபதி, உலக வங்கி ஒதுக்கும் கடன் உதவிகளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு பெற்றுக்கொள்ளக்கக்கூடிய வகையில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அந்த கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டு எரிவாயு மற்றும் உரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே தீர்மாணித்துள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வரி உயர்வு, டீசல், மண்ணெண்ணெய் மானியம் நீக்கம் ஆகியவை கடற்றொழில் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆபத்தில் உள்ள மற்ற குழுக்கள் குறித்தும் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரும்போது இந்த விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்பட நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்தார்.

Social Share

Leave a Reply