தடுமாறிய இந்தியா அபார மீள் வருகை – இரண்டாம் நாள் இன்று

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான இரத்தான டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தில் ஆரம்பமானது. ரோஹித் ஷர்மா உபாதை காரணமாக விளையாட முடியாத நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா அணிக்கு தலைமை தாங்குகிறார். இந்த தொடரின் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையிலேயே விராத் கோலி டெஸ்ட் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா அணி தடுமாறி வந்தது. 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷாப் பான்ட், ரவீந்தர் ஜடேஜா ஜோடி நிதானம் கலந்த அதிரடியினை வெளிப்படுத்தி இந்திய அணியை மீட்டு எடுத்தார்கள். இருவரும் 222 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். ரிஷாப் பான்ட் 111 பந்துகளில் 146 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மொஹமட் ஷமி ஆடுகளத்தில் காணப்படுகிறார்.

இந்தியா அணி முதல் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்ட்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 3 விக்கெட்களையும், மத்திய பொட்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இன்று இந்தியா அணி மேலும் ஓட்டங்களை பெற்றுக் கொண்டால் மேலும் பலமான நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம்.

இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.

தடுமாறிய இந்தியா அபார மீள் வருகை - இரண்டாம் நாள் இன்று

Social Share

Leave a Reply