இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாளில் இந்தியா அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியா அணி பின் மத்திய வரிசையின் அபார துடுப்பாட்டம் மூலம் மீள் வருகை ஒன்றை பெற்றது. ஜடேஜாவின் சதம் மூலம் ஜஸ்பிரிட் பும்ராவின் சாதனை மூலமும் இந்தியா அணி துடுப்பாட்டத்தில் இரண்டாம் நாளில் மேலும் பலம் பெற்றது.
டெஸ்ட் போட்டி ஒன்றின் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட கூடுதலான ஓட்டங்களான 28 ஓட்டங்கள் என்ற பிரைன் லாரா, ஜோர்ஜ் பெய்லி ஆகியோருடைய சாதனைகளை முறியடித்து 29 ஓட்டங்களை ஸ்டுவோர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சில் பெற்றுக்கொண்டார் . 20-20 போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு 36 ஓட்டங்களை வழங்கிய ப்ரோட், நேற்று 35 ஓட்டங்களை வழங்கி டெஸ்ட் போட்டியின் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை வழங்கியவராக தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். துடுப்பின் மூலம் பும்ரா 29 ஓட்டங்களை பெற உதிரிகளாக ஒரு முறையற்ற பந்து, அகலபந்துக்கு நான்கு ஓட்டங்கள் என உதிரிகளாக 6 ஓட்டங்களையும் வழங்கியிருந்தார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்தியா அணி 84.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 416 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா அணி தடுமாறி வந்தது. 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷாப் பான்ட், ரவீந்தர் ஜடேஜா ஜோடி நிதானம் கலந்த அதிரடியினை வெளிப்படுத்தி இந்திய அணியை மீட்டு எடுத்தார்கள். இருவரும் 222 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். ரிஷாப் பான்ட் 111 பந்துகளில் 146 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரவீந்தர் ஜடேஜா 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பும்ரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 5 விக்கெட்களையும், மத்தியு பொட்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி இந்தியா அணி போன்றே தடுமாறி வருகிறது. 27 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஜோ ரூட் 31 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அதிரடியாக துடுப்பாடும் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொனி பாஸ்டோவ் ஆகியோர் ஆட்டமிழ்க்காமல் துடுப்பாடி வருகின்றனர். நியூசிலாந்து அணியுடன் அதிரடி நடாத்தியது போன்று இந்தியா அணியுடன் அதிரடி நடாத்தி ஓட்டங்களை குவித்தால் இங்கிலாந்து அணி பலம் பெறும்.
இந்த தொடரில் இந்தியா அணி 2-1 என இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்த போட்டியில் இந்தியா தோல்வியிலிருந்து தப்பித்துக் கொண்டால் தொடர் வெற்றி காத்திருக்கிறது.