சர்வதேச நாணய நிதிய கூட்ட தொடர் இலகுவானதாக அமையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (05.07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கூட்ட தொடர் வெற்றிகரமானதாக நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக கடன்களை மீள செலுத்துவது தொடர்பிலான ஒழுங்கமைப்புக்களை செய்து அவற்றினை சர்வதேச நாணய நிதியத்துக்கு கையளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், கடந்த காலங்கள் போலல்லாமல் கடினமானதாகவும், குழப்பமானதாகவும் அமைந்ததாக மேலும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் போது அபிவிருத்தி அடைந்த நாடாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம், ஆனால் இம்முறை கடனாளியாக பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
“நாம் கையளித்துள்ள ஒப்பந்தமானது சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பளார் சபைக்கு அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அதனை விட கடன் மீள் செலுத்துகை தொடர்பிலான திட்டம் கையளிக்கப்பட்டு அது அவர்களுக்கு திருப்தியளிப்பதாக இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பபடும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.
“இலங்கைக்கான சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் கடன் மீள் செலுத்துகை தொடர்பிலான திட்டங்களை தயார் செய்து வருகின்றனர். ஓகஸ்ட் மாதத்தில் அது தயாராகிய பின்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதே நேரத்தில் இந்தியா, ஜப்பான், சீனா, போன்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாகவும்” ரணில் மேலும் கூறியுள்ளார்.
