பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். வீட்டுக்கு தீ பற்றி எறிந்து சில மணி நேரங்களின் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைதியினை பேணுமாறும், வன்முறைகள் தீர்வாகாது எனவும் இந்த சம்பவத்துக்கு கண்டனங்களை தெரிவிப்பவர்கள் கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் சனத் ஜெய்சசூரியா தனக்கு பிரதமரோடு மாற்றுக் கருத்து இருந்தாலும், வீட்டினை எரிப்பது தவறு எனவும், அந்த வீடு ரோயல் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மஹேல ஜெயவர்த்தன, ரொஷான் மஹாநாம, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், எரான் விக்ரமரட்ன, ராஃப் ஹக்கீம் என பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் வெலிகம நகரசபை தலைவரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவருமான ரெஹான் ஜயவிக்ரம “தான் இந்த தீ மூட்டல் சம்பவத்துக்கு காரணமென சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருவதாகவும்”, அதனை மறுத்துள்ளதோடு, இந்த சம்பவத்துக்கு தனது கண்டனங்களை வெளியிடும் அதேவேளை, ஜனாதிபதி மாளிகையிலோ, செயலகத்திலோ நடைபெறாத சம்பவங்கள் ஏன் பிரதமர் வீட்டில் நடைபெற்றன எனும் கேள்வியினையும் எழுப்பியுள்ளார். இது திட்டமிட்ட செயல் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.