இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் – மனோ

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக வேண்டும். அதுபோல் மதசார்பற்ற நாடாகவும் வேண்டும். இந்த கருத்துகள் நாட்டின் அரசியலமைப்புக்குள், சட்ட வரையறைக்குள் வர வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“எம்பிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில், நாட்டுக்கும், பதவிக்கும் சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள். உண்மையில் நாட்டுக்கும், பதவிக்கும் தாம், ஒருபோதும் சொந்தக்காரர்கள் இல்லை, தெரிவு செய்யப்பட்ட சில காலத்துக்கான குத்தகைகாரர்கள்தான் என்பது சிலருக்கு மறந்து விடுகிறது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கண்காணிக்க நிரந்தரமாக மக்கள் சபைகள் தேவை. ஆகவே உங்கள் மக்கள் சபை என்ற பிரேரணையை வரவேற்கிறேன்” என காலிமுக போராட்டக்காரர்கள் – அரசியல் கட்சிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் நிகழ்த்திய உரையில் மனோ எம்பி தெரிவித்தார்.

“ஆனால், மக்கள் சபை என்ற பிரேரணையை சும்மா வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அது நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு சட்ட வலு கிடைக்கும். அதேபோல் இன்னமும் சில அடிப்படை விடயங்கள் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும்.

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதை தீர்க்காமல் ஒன்றும் நடக்காது. உங்கள் போராட்டம் சிங்கள போராட்டமல்ல என நினைக்கிறேன். தமிழ் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். முஸ்லிம் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். அது சிங்கள, தமிழ், முஸ்லிம் போராட்டம் என நினைக்கிறேன்.

இந்த கருத்தும், போராட்டக்களத்தில் இருந்தால் போதாது. அதுவும் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும். எப்படி? இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடு என்பதும், மதசார்பற்ற நாடு என்பதும் நாட்டின் அரசியமைப்பில் சட்டப்படி இடம்பெற வேண்டும்.

இந்நாடு ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்தப்படக்கூடாது. இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும். இது எமது போராட்டம்” என மனோ கணேசன் மேலும் அங்கு தெரிவித்தார்.

இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் - மனோ

Social Share

Leave a Reply