குறுந்தூர் மலை விவகார நீதிமன்றம் தீர்ப்பளித்தது

குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிசார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரன் ஆகியோர் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பிலே பொலிசார் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழக்கினுடைய தீர்ப்பை இன்றைய தினம் வழங்கினார்

இந்த தீர்ப்பிலே இரு தரப்பு வாதங்களையும் உய்த்தறிந்த நீதிபதி புதிதாக குறுந்தூர் மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் எனவும், மேலும் இந்த புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றியதன் பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு பொலிசாரக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியிருக்கின்றது.

மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த கட்டளையிலே பாரம்பரியமாக முல்லைத்தீவு குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தாம் செய்து வருகின்ற பூசை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும், தொடர்ந்து அந்த இடத்திலேயே சமாதான குலைவு ஏற்படாத வகையிலே பொலிசார் தமது பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கி இருக்கிறது என சட்டதரணி தனஞ்சயன் தெரிவித்தார்.

குறுந்தூர் மலை விவகார நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Social Share

Leave a Reply