தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான கொள்கை வரைபு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாட்களில் சகல கட்சிகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த தேசிய அரசாங்கத்துக்கான கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வரைபு கையளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, 10 கட்சிகளின் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும், ஆனால் அமைச்சு பதவிகளை பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை இன்னமும் அறிவிக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி தாம் இந்த தேசிய அரசாங்க திட்டத்துக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
