இலங்கை தனி சுதந்திர நாடாக யாருடனும் தொடர்புகளை பேண முடியும். இலங்கை – சீனா உறவுக்கிடையில் இந்தியா இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும், இலங்கை மீது அழுத்தம் செலுத்த கூடாது எனவும் சீன வெளியுறவு அமைச்சின் செயலாளர் வோங் வென்பின் சீனாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆய்வுக்கப்பல் யுவன் வோங் 05, இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தத்து 18 ஆம் திகதி வரையில் இலங்கையில் தரித்து நிற்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பாதுக்காப்பு காரணங்களை முன்வைத்து இந்தியா குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீனாவிடம் இலங்கை இந்த கப்பலை அனுப்புவதனை பிற்போடுமாறு எழுத்து மூலமாக கோரிக்கை முன்வைத்திருந்தது.
“சீனா- இலங்கை உறவு இரு நாடுகளினாலும் சுதந்திரமாக, பொது ஆர்வங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்து. இந்த உறவு எந்த மூன்றாம் தரப்பையும் குறி வைத்தது அல்ல. ஆகவே இந்தியா
பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது” என கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை சீனா கப்பலை அனுப்ப வேண்டாமென கூறியமைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என மேலும் கூறியுள்ளார்.
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அது தனது சொந்த வளர்ச்சி, நலன்களை கருத்திற் கொண்டு ஏனைய நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும்,” என்று கூறிய பேச்சாளர், “சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமாகவும், விவேகமான முறையிலும் பார்க்குமாறும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுமூகமான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்துமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா கேட்டுக்கொள்கிறது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை, இந்து சமுத்திரத்தில் ஒரு போக்குவரத்து மையமாக உள்ளது. சீனா உள்ளிட்ட பல விஞ்ஞான ஆய்வுக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் மீள் நிரப்புகைக்கவும், விநியோகத்திற்காகவும் நிறுத்தப்பட்டு வருகின்றன. “சீனா எப்போதுமே பெரும் கடல்களில் வழி செலுத்துவதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துவதோடு, கடலோர நாடுகளின் அதிகார வரம்பை அவர்களின் கடல் எல்லைக்குள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முழுமையாக மதிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்தியா, சீனா கப்பலின் மூலம் செய்மதிகளை கண்காணிப்பதற்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவுமே சீன கப்பல் இலங்கைக்கு வருகை தருவதாகவும் அதனாலேயே சீன கப்பலின் வருகையை எதிர்ப்பதாகவும் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன.
“சீனா கப்பல் இலங்கைக்கு செல்வது தொடர்பிலான அறிக்கை தமக்கு கிடைத்ததாகவும், அது தொடர்பிலான விடயங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும்” இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் புது டெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
