நான்கு சுவருக்குள் கோட்டா!

தாய்லாந்து சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினை பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே செல்ல வேண்டாமென தாய்லாந்து பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூவருடன் தனி விமானம் மூலமாக தாய்லாந்து விமான நிலையத்துடன் இணைந்துள்ள இராணுவ விமான நிலையத்தை வந்தடைந்தார் என தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்திருந்தது. மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ தமது நாட்டில் தங்க மூன்று மாத கால அனுமதியினை தமது அரசு வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ப்ரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ள அதேவேளை எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாதென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து புகெட் விமான நிலையத்தை சென்றடைவதாக இருந்த போதும் அவர் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு இராணுவ விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக தாய்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கியிருக்கும் விடுதி வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பினை கருதி, தாய்லாந்தை விட்டு வெளியேறும் வரை வெளியே எங்கும் செல்ல வேண்டாமென விசேட பாதுகாப்பு பிரிவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா கடந்த 11 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், மூன்று மாத கால சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி. இலங்கையிலிருந்து கடந்த மாதம் 13 ஆம் திகதி மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து இரண்டு தினங்களில் சிங்கப்பூர் சென்றார். அங்கு நான்கு வாரங்கள் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த நிலையில் தாய்லாந்து சென்றுள்ளார். இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பிறிதொரு நாட்டுக்கு அவர் பயணமாக வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை திரும்ப வேண்டும் என்ற நிலையிலேயே தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

Social Share

Leave a Reply