இன்று(14.08) நள்ளிரவு முதல் தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு QR முறையின் கீழ் புதிய அளவு வழங்கப்படவுள்ளது. கடந்த வாரத்தின் தரவுகளை ஆராய்ந்து அதற்கேற்ற மாற்றங்களை செய்யுமாறு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று அறிவித்துள்ளார்.
நிறைவுக்கு வரும் இந்த வாரத்தில் எரிபொருளுக்கான வரிசை இல்லாமல் போயுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களது எண்ணிக்கை குறைவான அளவுகளிலேயே காணப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அளவினையும், விநியோகம் செய்யப்பட்ட எரிபொருள் அளவினையும் ஆய்வு செய்து, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR முறையின்றி எரிபொருள் வழங்கியிருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.