இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வங்கியின் தலைவருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மதியம் 12.30 இற்கு இலங்கை வங்கி தலைமை காரியாலயத்துக்கு முன்னதாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உப செயலாளர் கார்த்திக் எமக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் தலைவர் பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து கணக்காய்வாளர் நாயக திணைக்கத்தினால் விசாரணை செய்யப்பட்டு அறிக்கை பாரளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு விசாரணைகளின் போதும் பல முறைகேடான, சட்டத்துக்கு புறம்பான விடயங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தனது தொடர்புகளை பயன்படுத்தி இலங்கை வங்கி தலைவர் அவருக்கு எதிரான போராட்டங்களை அடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன் ஒரு கட்டமாக அமைதியான போராட்டங்களில் ஈடுப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் கிளைச்சங்கத்தின் செயலாளர் தனஞ்சய ஸ்ரீவர்தன, முன்னாள் தலைவர் பாலித்த அடம்பாவல ஆகியோர் கைது செய்யப்பட்டனர் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தலைவரை பதவி விலக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி இன்றைய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.
