சுகாதர அமைச்சின் சீரற்ற செயற்பாட்டால் மருந்து தட்டுப்பாடு?

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டு வரும் மருந்து தட்டுப்பாடு, சத்திர சிகிச்சைக்கான மருந்துகளது தட்டுப்பாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு ஒகஸ்ட் மாதத்தில் இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்ட போதும், அது நடைபெறவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைக்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்து அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இந்த கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக தொழில் நுட்ப குழுக்களை மாவட்டம் தமது கிளைச் சங்கங்கள் மூலமாக ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் எவ்வாறான தேவைகள், எந்த இடங்களில் காணப்படுகின்றன என்ற விடயங்களை அறிந்து, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியுமென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் மோசமான பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் விநியோக சிக்கல் நிலை காரணமாக மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் சீராக அமையவில்லை. இந்த நிலைக்கு பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டிய சுகாதர அமைச்சு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதே காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் கையிருப்பு போன்றனவற்றில் முரணான கருத்துக்களை சுகாதர அமைச்சு வெளியிட்டு வருவதாகவு தெரிவித்த சங்கம், உரிய நிதியினை ஒதுக்கி தேவையான மருந்துகளை உரிய நேரத்தில் கொள்வனவு செய்து அவற்றை விநியோகம் செய்ய வேண்டிய கடப்பாடு சுகாதர அமைச்சுக்கு உள்ளதாக தெரிவித்தது. மருந்துகளை விநியோகம் செய்யும் பகுதியில் பாரிய சிக்கல் நிலைகள், ஒழுங்கீனம் என்பன காணப்படுவதாகவும், ஊழல் காணப்படுவதாகவும் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் கேள்வி விலை மனு கோரல் இடம்பெறவேண்டுமெனவும் அதன் மூலமாகவே தட்டுப்பாடின்றி மருந்துகளை கொள்வனவு செய்து சீராக விநியோகிக்க முடியுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதர அமைச்சு உரிய நடவடிக்கைளை எடுத்து பிரச்சினைகளை தீர்க்காதவிடத்து மக்களின் உயிர்களையே இதன் பின் விளைவாக வழங்க வேண்டி வருமென்ற எச்சரிக்கையினையும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் முன் வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply