கோட்டா அமெரிக்க குடியுரிமையினை பெற முயற்சி?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு நிரந்தரமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷ வரும் வாரம் நாடு திரும்புவார் என நேற்றைய தினம் ரஸ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் க்ரீன் கார்ட் முறை மூலமாக அங்கு செல்வதற்கான நடவடிக்கைகளை அவரின் வழக்கறிஞர் கடந்த மாதம் முதல் மேற்கொண்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மாலைதீவுகள் சென்று பின்னர் இரு தினங்களில் சிங்கப்பூர் பயணமானார். விசா நிறைவடைந்த நிலையில் அங்கிருந்து இம்மாதம் 11 ஆம் திகதி தாய்லாந்து பயணமான அவர், மூன்று மாதங்கள் அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கேயே மூன்று மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்ட போதும் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே அவர் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அனோமா ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையினை கொண்டுள்ளதனால் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையினை க்ரீன் கார்ட் மூலம் பெறுவதற்கு தகுதியினை கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வழக்கறிஞர்களுடன் நாட்டுக்கு திரும்புவது தொடர்பாக கலந்தாலோசித்து வருவதாகவும், அமெரிக்க குடியுரிமையினை மீள பெறுவதற்கான ஆவணங்களை வழக்கறிஞர்கள் தயார் செய்து வருவதாகவும் டெய்லி மிரரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply