இலங்கையின் புதிய கிரிக்கெட் உபகரண நிறுவனம் ஒன்று நேற்று(17.08) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஹிரந்த பத்தகே இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஜயான் ஜயவர்தன இந்த நிறுவனத்தின் பங்காளராக இணைந்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான சகல கிரிக்கெட் உபகராணங்களும், தொழில்சார் கிரிக்கெட் வீரர்களுக்கான சகல உபகாரணங்களும் இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. பந்துகள், கிரிக்கெட் துடுப்பு மட்டை போன்ற கைகளினால் தயாரிக்கப்பட்டவையம் உள்ளன.
கடந்த காலங்களில் இவர்களது தயாரிப்புகள் பாவனைக்கு விடப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தியோகபூர்வமாக குறித்த நிறுவனத்தின் தயாரிப்புகள் நேற்று வர்த்தக கிரிக்கெட் சம்மேளனத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ன, இந்த நிகழ்வில் பங்குபற்றி ஆரம்பத்து வைத்தார். இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலை கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே HB தயாரிப்புகளை பாவித்து வருவதாக நிகழ்வில் தெரிவித்த ஹிரந்த பத்தகே, ஓமான் தேசிய கிரிக்கெட் அணியும் இந்த தயாரிப்புகளை பாவித்து வருவதாக கூறினார்.
இலங்கையின் தயாரிப்புகளை இலங்கை வீரர்கள் பாவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தயாரிப்புகள் உருவாக்கப்பட்டதாக நிறுவன உரிமையாளர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கிரிக்கட் உபகரணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த உபகரணங்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை இந்த சிக்கல்களை தீர்க்குமென பாடசாலை கிரிக்கெட் சம்மேளன தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தயாரிப்புகள் HB எனவும், கனிஷ்ட கிரிக்கட் வீரர்களுக்கான தயாரிப்புகள் OVI எனும் பெயரிலும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்த தயாரிப்புகள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்சார் கிரிக்கெட் உலகில் தரமான போட்டிமிக்க தயாரிப்புகளாகவே தென்பட்டன.