வெள்ளை பூண்டு கொள்ளை. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – மனோ MP

வெள்ளை பூண்டு சதோச நிறுவனத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தேசிய தொலைகாட்சி ரூபவாஹிணியில் நடைபெற்ற சிங்கள அரசியல் நிகழ்ச்சியில் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

குறைந்த விலைக்கு வாங்கிய உள்ளி பூண்டினை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து அதனை மீள்கொள்வனவு செய்து அதிக விலைக்கு மக்களுக்கு விற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கீழ்வருமாறு அவர் கூறியுள்ளார்.

“டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை, அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில்கொடுங்கள்” என, “சதோச” (CWE) என்ற அரச நிறுவனத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரைவிடுத்தாராம்.

ஆகவே துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலனை “சதோச”வின் களஞ்சியசாலைக்குகொண்டு வந்தார்களாம்.

அப்புறம் நடந்ததுதான் சுவாரசியம்..!

“சதோச”வின் ராகம களஞ்சியசாலைக்கு வந்த, அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், “பில்” கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= கணக்கில் கொடுக்கப்படுகிறது.

அதன் பின் நிகழ்ந்தது, அதைவிட மகா சுவாரஸ்யம்..!

இப்படி நள்ளிரவில் கொடுக்கபட்ட அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை, அதே “சதோச” நிறுவனம், கிலோ 445/= கணக்கில் மீண்டும் வாங்குகிறது.

அதன் பின் அது கிலோ 500/= மேல் அப்பாவி வாடிக்கையாளர் பொது மக்களுக்கு நாடு முழுக்க உள்ள“சதோச” முகவர் நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது.

இதுதான், “நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை” .

இப்படியே இதற்கு முன்னும் சீனி, பால்மா, மாவு, உளுந்து ஆகிய கொள்கலன்கள் விற்கப்பட்டதாக, இப்போது இந்த நடு ராத்திரி கொள்ளைக்கு துணை போக முடியாமல், மனம் நொந்து, இந்த நாட்டை காப்பாற்ற வந்த தேசிய வீரர்களின் நிர்வாகத்தில் இருந்து பதவி விலகும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன கூறுகிறார்.

வெள்ளை பூண்டு கொள்ளை. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் - மனோ MP

Social Share

Leave a Reply