-சுந்தரலிங்கம். முகுந்தன்-
நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியுடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் ஜந்நூறு வறிய கலைஞர்களுக்கான ஜயாயிரம் ரூபா பெறுமதியான (உலர் உணவுப்பொதி) நிவாரண உதவித்திட்டத்தினை வழங்கவுள்ளது.
குறித்த செயற்றிட்டமானது நீலன் திருச்செல்வம் அறக்கொடை நிதியத்தின் நிதி அனுசரனையில் யாழ்ப்பாணம் ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
யாழ்ப்பாண பிரதேச செயலகம் (25 பேர்), பருத்தித்துறை பிரதேச செயலகம் (50 பேர்), தென்மராட்சி பிரதேச செயலகம் (50 பேர்), ஊர்காவற்துறை பிரதேச செயலகம் (25 பேர்), வேலணை பிரதேச செயலகம் (25 பேர்), மருதங்கேணி பிரதேச செயலகம் (25 பேர்) கரைச்சி பிரதேச செயலகம் (50 பேர்), பூநகரி பிரதேச செயலகம் (25 பேர்), கண்டாவளை பிரதேச செயலகம் (25 பேர்), பளை பிரதேச செயலகம் (25 பேர்), மாந்தை மேற்கு பிரதேச செயலகம் (50 பேர்), துணுக்காய் பிரதேச செயலகம் (25 பேர்), ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் (50 பேர்), கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் (25 பேர்), நெடுங்கேணி பிரதேச செயலகம் (25 பேர்) என மொத்தமாக பதினைந்து பிரதேச செயலர் பிரிவில் வசிக்கின்ற தெரிவு செய்யப்பட்ட ஜந்நூறு வறிய கலைஞர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட இருக்கின்றது.
குறித்த செயற்றிட்டம் மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் கலைஞர்களில் இசைக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், கூத்துக்கலைஞர்கள், பறையிசைக்கலைஞர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள், திரைப்படக்கலைஞர்கள், பாடகர்கள், சிற்பம் மற்றும் ஓவியக்கலைஞர்கள் ஊடகத்துறையினர் போன்ற கலைஞர் வகைமையில் இருந்து வறிய நிலையில் உள்ள கலைஞர்களை ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பிரதேச செயலர்களினால் தெரிவு செய்யப்பட்ட வறிய கலைஞர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்பட இருக்கின்றது.
மேற்படி உதவித்திட்டத்தின் மூலம் பயனாளர்கள் பிரதேச செயலகங்களூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், வரும் முதலாம் திகதிமுதல் உலருணவுப் பொதிகள் அதிகாரிகளூடாக பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்படும் எனவும் , மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறித்த நுண்கலைக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.