-டுபாயிலிருந்து விமல்-
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் மிகவும் முக்கியமான போட்டி இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டிக்குத் தெரிவாவதற்கு மிகவும் முக்கியமாக இந்தப்போட்டி அமையவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா அணியை பொறுத்தளவில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டி வாய்ப்பு முழுமையாக பறிபோய்விடும். இவ்வாறான நிலையில் அவர்கள் கடுமையாக இன்றைய வெற்றிக்கு போராட வேண்டும்.
இலங்கை அணி தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் அணியுடன் மீதமுள்ள போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஓட்ட நிகர சராசரி வேகம் கூட தாக்கம் செலுத்தும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி தெரிவு இலகுவாகிவிடும். எனவே இலங்கை அணி போராட வேண்டும்.
இந்தியா அணியினை, இலங்கை அணி வெற்றி பெறுவது இலகுவானதல்ல. முழுமையான பலமான இந்தியா அணியினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி மோசமான ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் மீள் வருகையினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றது பலமான அணிகளை அல்ல. இனி விளையாடவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளே பலமானவை.
இந்த இரு அணிகளையும் இலங்கை அணி வெல்வது இலகுவானதல்ல. இரு அணிகளில் ஒரு அணியினை வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிவிடலாம் எனும் நிலை காணப்படுகிறது.
இலங்கை அணி கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ள நிலையில் அணியில் மாற்றங்களின்றி விளையாடவுள்ளார்கள். துடுப்பாட்ட வரிசை முழுமையாக போர்மில் உள்ளது. சகலரும் ஓட்டங்களை பெற்றுள்ளமையினால் மாற்றங்கள் தேவையில்லை. பந்துவீச்சில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் சிறப்பாக செயற்படவேண்டும். ஓட்டங்களை வழங்கியுள்ளார்கள். ஓட்டங்களை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்திய அணியின் நீண்ட துடுப்பாட்ட வரிசையினை தகர்ப்பது இலங்கை அணிக்கு மிகவும் கடினமானா பணி. அதனை சாதகமாக செய்துவிட்டால் வெற்றி பெறலாம். இந்தியா அணியின் பந்துவீச்சு இலகுவானதல்ல. காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவேஸ் கான் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் அணியில் இணையும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இடதுகர துடுப்பாட்ட வீரர் ஒருவர் தேவை என்ற நிலை உள்ளது. அவேஸ் கான் அணிக்குள் திருப்புவதனால் ரவி பிஷோனி நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அத்தோடு அக்ஷர் பட்டேல் அணிக்குள் இணைக்கபப்டுவார் எனவும் நம்பப்படுகிறது. அக்ஷர் பட்டேல் இடதுகர துடுப்பாட்ட வீரர்.
இந்தியா அணியின் தொடர்ச்சியான மாற்றங்கள் அணியின் சமநிலை தன்மையில் தாக்கம் ஏற்படுத்தலாம். இலங்கை அணி கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அணி. இதனை சாதகமாக பாவித்துக்கொண்டால் வெற்றி பெறும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
கடந்த போட்டிகளில் விளையாடிய ஆடுகளங்கள் போலவே இன்றைய ஆடுகளமும் காணப்படுகிறது. 175 ஓட்டங்கள் அளவில் பெறப்படலாம். இரண்டாவது துடுப்பாடும் அணிக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் இன்றும் நாணய சுழற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் . பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீசி ஓட்டங்களை கட்டுப்படுத்துவதே இன்றைய போட்டியின் மிகவும் முக்கியமான நிலை.