காலிமுகத்திடலில் பயங்கரவாத தடை சட்டத்துக்கெதிரான கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைசட்டத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் இன்று(22.09) காலிமுகத்திடலை வந்தடைந்தது. இன்று மாலை கையெழுத்து சேகரிக்கும் வாகனம் காலிமுகத்திடலை வந்தடைந்தது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் M.A சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் கடந்த பெப்ரவரி மாதம் காங்கேசன்துறையில் ஆரம்பித்து பல மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் இரண்டாம் திகதி ஹம்பாந்தோட்டையில் இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நிறைவுக்கு வருமென காலிமுகத்திடலில் உரையாற்றிய சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் நடைபெற்ற கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன், ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், S.M மரிக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரட்ன, முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களோடு தொழிறங்க பிரதிநிதிகள், சமூக சேவையாளர்கள், போராட்டக்காரர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரை இந்த போராட்டம் தொடருமென இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “2017 ஆம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் குடுத்த வாக்குறுதியை மீறி தானே கையொப்பமிட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் மூலமாக மூன்று மாணவர்களை தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார். ஆகவே எமது போராட்டம் தொடரும். இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இன, மத பேதமின்றி அதிகரித்து வருகிறது. இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே ரணில் – ராஜபக்ஷ ஆட்சியாளர்களை அகற்ற முடியும்” என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த கையெழுத்து போராட்டத்தில் பல மக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

Social Share

Leave a Reply