நீதிமன்றத்தினை அவமதித்த குற்றசாட்டுக்கான அறிவிப்பை பொலிஸ் மா அதிபர் அடங்கலாக மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றம் நேற்று(23.09) வழங்கியுள்ளது.
முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேயசேகரவுடன் கைது செய்யப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் என்பவரின் சம்பள நிலுவைகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கைகள் எடுக்காமை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, உதவி பொலிஸ் மா அதிர்கள் மஹிந்த குணரத்தன, J. S.வீரசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சனத் குமார ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணித்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் இனது சம்பள நிலுவை தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த மே 18 ஆம் திகதி சம்பள நிலுவைகளை 23.03.2022 முதல் நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை செயற்படுத்த தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் பொலிஸ் மா அதிபர் அடங்கலாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட வியாபர முக்கியஸ்தரான மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை பாதுகாக்கும் முகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேயசேகர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், அவரோடு குற்றப்புலனாய்வு உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் கைது செய்யபப்ட்டு 11 மாதங்களின் பின்னர் போதிய ஆதரங்கள் இல்லை என பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தான் பிழையாக கைது செய்யப்பட்டதாகவும், தன்னுடைய சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும் தானும் தனது குடும்பமும் மிகவும் கடுமையாக கஷ்டப்படுவதாக சுகத் மென்டிஸ் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையியலயே நீதிமன்றம் அவருக்கான சம்பள நிலுவைகளை வழங்க உத்தரவிட்டிருந்தது.