சமூக வலய தளங்கள் மூலமாக பகிரப்படும் ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி ஏற்றலில் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக வவுனியாவில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
20 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் நடவடிக்ககைகள் இலங்கை பூராவும் நடைபெற்று வருகின்றன. வவுனியாவிலும் குறித்த வயது பிரிவினருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசிகளின் வகைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பப்டும் விஞ்ஞான பூர்வமற்ற, ஆதாரமற்ற தகவல்களை சிலர் பகிர்வதனால் மக்களிடையே தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பல கோடி மக்கள் ஊசி ஏற்றிவிட்டார்கள். யாருக்கும் எந்த அசம்பாவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை. எந்தவொரு தடுப்பூசி வகையும் ஏற்ற முடியாது என தடை செய்யப்பபடவில்லை. மறுக்கப்படவில்லை. தங்கள் நாட்டு உற்பத்திகளை தங்கள் தங்கள் நாடுகள் முதன்மைப்படுத்தி பாவிக்கின்றன.
உற்பத்தி இல்லாத நாடுகள் பணத்துக்கும், கொடையாகவும் பிற நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெறுகின்றன. ஆகவே தடுப்பூசிகள் தொடர்பில் எந்தவித சிக்கல் நிலையும் இல்லை. அனைவரும் ஊசிகள் ஏற்றிக்கொள்ளலாம்.
விஞ்ஞானிகள் செய்யும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எதுவுமறியாமல் சமூக வலைத்தளங்களில் எல்லாம் அறிந்தவர்கள் போல தகவல்களை பரப்பி மக்களை குழப்பும் நிலையை உருவாக்க வேண்டாமெனவும், தடுப்பூசிகளை ஏற்ற தங்களுக்கு உறுதுணையாக இருக்க உதவி செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகள் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.
தடுப்பூசிகள் ஏற்றப்படாதவர்களே அதிகம் இறக்கின்றனர். இரண்டும் ஊசிகளையும் பெற்றவர்கள் இறப்பது மிகவும் அரிது. இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் போலி தகவல்களுக்கு செவிமடுக்காமல், தங்களுக்குரிய ஊசிகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.
