கோல்களை குவித்து பிரேசில் காலிறுதியில்.

கோல்களை குவித்து பிரேசில் காலிறுதியில்.

கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் முன்னோடி காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி தென் கொரியா அணியினை வெற்றி பெற்று 18 ஆவது தடவையாக காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டி ஆரம்பித்தது முதல் பிரேசில் அணி பலமான விளையாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து கோல்களை பெற்றுக்கொண்டார்கள். முதல் பாதி நிறைவடைய முன்னரே நான்கு கோல்களையும் பிரேசில் அணி பெற்றுக் கொண்டது. தென் கொரியா அணி ஆறுதல் கோலாக ஒரு கோலை இரண்டாம் பாதியில் பெற்றுக்கொண்டது.

போட்டி ஆரம்பித்து ஏழாவது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் முதல் கோலை பெற்றுக்கொண்டார். உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விளையாடிய நெய்மர் 13 ஆவது நிமிடத்தில் பனால்டி கோலை அடித்தார். அடுத்த கோல் 29 ஆவது நிமிடத்தில் ரிச்சார்லிசன் மூலம் பெறப்பட்டது. 36 ஆவது நிமிடத்தில் லூகாஸ் பகியூட்டா நான்காவது கோலை பெற்றுக்கொண்டார்.

தென் கொரியா அணி கோல்களை பெற முயற்சித்த போதும் பலமான கோல் காப்பு மற்றும் பின்வரிசையின் சிறப்பான காப்பு மூலமாக தென் கொரியா அணியினால் ஒரு கோலை மாத்திரமே பெற முடிந்தது. பெய்க் செனுகோ 76 ஆவது நிமிடத்தில் தென் கொரியா அணிக்காக கோலை பெற்றுக் கொடுத்தார்.

பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் காலிறுதிப் போட்டியில் குரேஷியா அணியினை சந்திக்கவுள்ளது.

உலக கார்ப்பந்தின் ஜாம்பவான் பிரேசில் நாட்டின் பெலே வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குணமடைய மீண்டு வர போட்டி நிறைவடைந்ததும் பிரேசில் வீரர்கள் பதாதையினை தாங்கி மைதானத்துக்குள் வலம் வந்தனர். அதேவேளை ரசிகர்களும் பாரிய பதாதை ஒன்றை காட்சிப்படுத்தியிருந்தனர்.

Social Share

Leave a Reply