உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும்!

பசிக்கு கட்சி, நிற பேதம் இல்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (15.12) காலை உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் பதுளை மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“2023ல் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சமாளிக்க உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் துரிதமாக நடைபெற வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். மேலும் உணவு பாதுகாப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2023க்கு பிறகு முடிவடையாது. நாம் அதை தொடர்ந்தும் செய்வோம். நாம் அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

முடியுமானவரை விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்கி இருக்கிறோம். இம்முறை பெரும்போகம் அதிக விளைச்சலை தந்தால், எதிர்காலத்தில் அரிசி உபரியாக கிடைக்கும். இந்த விவசாய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய போதிய சேமிப்பு வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளை கண்டறிந்துள்ளோம். அதனை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதேநேரம் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவதற்கு, தேவையான திட்டத்தையும் நாங்கள் தயாரித்து வருகிறோம்” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply