முச்சக்கர வண்டியொன்றில் விற்ற பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, தம்புள்ளை கண்டளம பிரதேசத்தை சேர்ந்த அஜித் வர்ணசூரிய எனும் 44 வயதுடைய சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்த குழந்தையை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து, வைத்தியர்கள் சம்பவம் தொடர்பில் சந்தேகம் கொண்டு தம்புள்ளை வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
கண்டளம பகுதியில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் தாத்தாவுடன் இருந்தபோது, வீதியில் பான் முச்சக்கர வண்டியின் சத்தம் கேட்டு தனது தாத்தாவிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தை வீதிக்கு அருகில் ஓடி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த இடத்தில் குடிபோதையில் இருந்த நபர் இந்த குழந்தையை திட்டிவிட்டு பான் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டு இவ்வாறு தாக்கியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.