அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு புறம்பாக சுகாதார நிபுணர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி நடைபெறுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய இது தொடர்பான செயற்பாடுகள் பல்வேறு தரகர்கள் ஊடாக ஏனைய தரப்பினரின் தலையீட்டில் மேற்கொள்ளப்படுவதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும்போதே சுகாதார நிபுணர்களின் கல்வியாளர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“இலங்கைக்கு உதவும் வகையில் உலகில் பல நாடுகள் இதுவரை இல்லாத தொழில் வாய்ப்புகளை எமது நாட்டிற்கு வழங்கியுள்ளன. எனினும் இந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட இந்த வேலைகளை சரியான முறையில் நிர்வகித்து சரியானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அரசாங்கத்தினால் முடியவில்லை. அதனால்தான் சுகாதார நிபுணர்களை அனுப்புவது கடத்தலாக அவ்வப்போது மாற்றப்பட்டதால் தொழில் சந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது.
பல நிறுவனங்கள் அவர்களின் தரகர்கள் மூலம் இந்த வேலைகளால் வருமானம் ஈட்டுகின்றனர். பலர் லஞ்சம் பெற்று உழைத்து வருகின்றனர். இது குறித்து எங்களிடம் ஆதாரம் உள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.