இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமை நகர திட்டம் ஆரம்பம்

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளைஞர்களின் பங்கேற்புடன் தூய்மையான பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என ஜானதிபதி ஊடக பிரிவினால் இன்று(26.01) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி முன்னெடுக்கப்படும் ‘ தேசிய இளைஞர் தளம்’ வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன என மேலும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

முதற்தடவையாக இலங்கையின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட நகரமொன்று இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தூய்மைப்படுத்தப்படும் .

இதற்கமைய பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் 335 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 50,000 இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட நகரத்தை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்ததாக ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ள 335 நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு அப்பிரதேசங்களில் உள்ள பிரதேச சபை , நகர சபை, மாநகர சபை மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.பிரதேச செயலாளர் அலுவலகம், இலங்கை பொலிஸ் திணைக்களம், சுகாதார சேவைகள் அலுவலகம் மற்றும் ஏனைய சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய அடையாளம் காணப்பட்ட நகரம், வருடம் முழுவதும் மாதந்தோறும் தெரிவுசெய்யப்பட்ட தினத்தன்று சுத்திகரிக்கப்பட வேண்டும். இதற்காக அத்தொகுதிக்குள் உள்ளடங்கும் ஏனைய இளைஞர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பயிற்சி நிலையத்திலுள்ள இளைஞர்கள், சாரணர்கள், மாணவர் படையணி மற்றும் பாடசாலை சூழல் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் மறைமுகமாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் தன்னார்வ தொண்டர்களின் (UNV)பங்களிப்பை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமை நகர திட்டம் ஆரம்பம்

Social Share

Leave a Reply