மின்வெட்டுகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கவில்லை!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தர பரீட்சையை கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளில் மாற்றங்களையோ அல்லது மின்வெட்டுகளை அமுல்படுத்தாதிருக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகள் காரணமாக மின் விநியோக தடையை இடைநிறுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என இலங்கை மின்சார சபை வேறு எந்த தரப்பினருடனும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு 4,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பரீட்சைகள் நடைபெறும் நேரத்தில் பகலில் மின்வெட்டு ஏற்படுத்தப்படவில்லை எனவும், ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், அது செயலிழப்பு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  (CPC) எரிபொருளை வழங்காமல் மின்சார சபையால் மின்சாரம் வழங்க முடியாது.” எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியான விநியோகத்தை வழங்க ஒப்புக்கொண்டால் நாங்கள் இது தொடர்பில் பரிசீலிக்கலாம், எனினும் அது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஊடாக செய்யப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டுகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கவில்லை!

Social Share

Leave a Reply