க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் துண்டிப்பை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்காது எனவும், அதற்க்கான கோரிக்கையினை முன்வைக்க வேண்டாமெனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக இலங்கை மின்சார சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர் தர பரீட்சசை காலத்தில் மின் தடைசெய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வருமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் சட்டத்தின் மூலம் உயர் நீதிமன்றத்துக்கு இந்த விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை, மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கை மின்சாரசபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, வலுசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்ரின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் தடை செய்வதில்லை என்ற முடிவு எட்டப்பட்டதது. இருப்பினும் நேற்று இரவும் மின் தடை செய்யப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே குறித்த எச்சரிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மின் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக இருந்தால் அதற்கு 4.1 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரசபை தலைவர் கூறியிருந்தார். அதற்கான பணத்தை அதிகரிக்கவுள்ள மின் கட்டணத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமெனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பெறப்படும் எரிபொருளுக்கான கட்டணங்களை 60 நாட்களுக்குள் வழங்க முடியுமென்ற ஆலோசனையினை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன் வைத்திருந்தது. அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தொடர்புபடுத்தல்களை வலுசக்தி அமைச்சு மேற்கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.