அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய இராணுவக் குழுவை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் துருக்கி மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லெபனான் ஊடாக சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் கருத்துகள் பகிரப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் அமைச்சுக்களின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,500ஐ கடந்துள்ள நிலையில், அவர்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
