-அகல்யா டேவிட்-
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக பிரதேச சுகாதார உதவி வைத்தியதிகாரி திருமதி கஸ்தூரி குகன் தெரிவித்தார்.
சுமார் 37 ஆயிரம்பேர் முதலாவது டோசினையும் 27 ஆயிரத்து ஐந்நூறுபேர் இரண்டாவது டோசினையும் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலேயே மிகவும் வறிய மக்களைக்கொண்ட அதிகளவிலான குக்கிராமங்கள் காணப்படுகிறன.
எனினும் இம்மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரதேசத்தில் பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல பொது கட்டடங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வயது அடிப்படையில் கட்டங்கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது இருபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு வழிப்பூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ. சிறிநாத் தெரிவித்தார்.