அரசாங்கத்தின் தீர்மானங்களால் பல்கலைக்கழகங்கள் அதிக நெருக்கடிகளை சந்திக்கின்றன – சஜித்

இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி தனியார் துறையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களும் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. எவ்வாறாயினும்,அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு முறையால் நிறுவனத்திற்கு ஏற்படும் அனைத்து இழப்புகளையும் மாணவ மாணவிகளிடமிருந்தே ஈடுசெய்ய தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், சில பல்கலைக் கழகங்களில் நிகழும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் முழுப் பல்கலைக்கழ கட்டமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும்.

இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (06.06) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பினார்.

01. இந்நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு தற்போதுள்ள
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் எண்ணிக்கை யாது? தற்போது சேவையில் ஈடுபடும் பல்கலைக்கழக விரவுரையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதன் பிரகாரம்,எத்தனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்? அது எவ்வளவு சதவீதம்?

02. அரச பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் செயற்படுமா? அப்படியானால், தற்போது பணியில் உள்ள பல்கலைக்கழகப் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதற்குப் போதுமானதா? அவ்வாறு இல்லை என்றால், இதற்கு அரசாங்கம் வழங்கும் தீர்வுகள் என்ன?

03.சர்வதேச அளவுகோல்களின் பிரகாரம்,பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடத்திலும் படிக்கும் மாணவர்களின் விகிதத்துடன் ஒப்பி்டும் போது இருக்க வேண்டிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் எண்ணிக்கை யாது? இதன்படி,இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர் விகிதத்துடன் ஒப்பிடுகையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? அது இந்நாட்டில் பட்டச் சான்றிதழுக்கான சர்வதேச அங்கீகாரத்தில் குறைவை ஏற்படுத்தாதா?

04.தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நியாயமற்ற வரிக் கொள்கையினால் இந்நாட்டில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் எனவும், தற்போது வெளிநாட்டில் இருப்பவர்கள் திரும்பி வர மறுப்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா? அவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? இந்நிலைமை இந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வித் துறைக்கும் ஆபத்தை விளைவிக்கும் அல்லவா? இதற்கு அரசாங்கம் வழங்கும் தீர்வு யாது?

05.பல்கலைக்கழக கல்விக்கு தகுதி பெற்ற தகுதி அடிப்படையிலான (10%) மற்றும் குறைந்த வருமானம் ரீதியாக (90%) மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் திட்டமானது முதலாம் ஆண்டு (2020/2021 உள்வாங்கல்) மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்த தாமதமானது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் 15,000 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கடுமையான அநீதியாகிவிடாதா? எனவே, இந்த மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் என்ன தீர்வுகள் யாது?

06.ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? இந்த துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நிதி மோசடி மற்றும் நிர்வாக சுற்றறிக்கை மீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால்,முறையான விசாரணைகள் கூட தாமதப்படுத்துவது பல்கலைக்கழகத்திற்கு இழைக்கப்படும் பாரிய அநீதியல்லவா?

07.தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக,அதன் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன.இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதா? அது என்ன?அந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த இதுவரை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா? அது எவ்வாறான நடவடிக்கை? இல்லை என்றால், இந்தப் பல்கலைக் கழகங்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையே வீழ்ச்சியடையும் வரை அரசாங்கம் காத்திருக்கிறதா?

Social Share

Leave a Reply