நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றும் சிறு தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில் துறையை – ஊக்கப்படுத்த வேண்டியது சட்டம் இயற்றும் இந்த உயரிய சபையின் பொறுப்பாகும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் – பெரும் பங்கினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.
இது பொதுமக்களின், செலவிடல் சக்தியை அதிகரித்து – ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் உத்வேகப்படுத்துகிறது.
உலக வங்கியின் மதிப்பீடுகளின் படி – வளர்ந்து வரும் மக்கள் தொகையினருக்கு – வசதியளிக்கும் பொருட்டு 2030 அளவில் ஏறத்தாழ 600 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, உலக அளவில் ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி, உக்ரேன்-ரஷ்ய மோதல் என்பனவற்றின் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
இலங்கையிலும் கூட பல்வேறு பெரிய நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
பொருளாதார வீழ்ச்சி, டொலர் நெருக்கடி காரணமாக தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் தனியார் கடன் மற்றும் வர்த்தக கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதனால், சிறு தொழில் முயற்சியாளர்கள் சிறிய முதலீடு செய்வதற்காக கடன் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மின்கட்டண உயர்வு, எரிப்பொருள் விலை அதிகரிப்பு, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, வரி அதிகரிப்பு காரணங்களால் பாதிக்கப்பட்டு உற்பத்தி செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில ஈடுக்கொடுக்க முடியாத நிலை எற்ப்பட்டுள்ளது.
அதனால், தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்கும் விசேடத்திட்டமொன்று அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என நான் கோரிக்கை முன் வைக்கிறேன். அனைத்து இலங்கை ஹோட்டல்களும் தேவையான ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களுடன் இயங்குவதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றுகளின் போது, சில ஊழியர்கள் வேறு வேலை
வாய்ப்புகளைக் தேடியதாகவும், மற்றவர்கள் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது
நாட்டில் இருக்கும் வேறு எந்தத் தொழிலும் – ஆடை தொழில் துறையைப் போல வேலை வாய்ப்புக்களை வழங்குவதில்லை.
கிட்டத்தட்ட 5 – 6 லட்சம் தொழில் வாய்ப்புகளை இத்துறை வழங்குகிறது. இத்துறையில் காணப்படும் மூலப்பொருள் இறக்குமதி தடைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இத்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆடைத் துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த நாட்டின் தொழில்துறை பணியாளர்களில் 15 சதவீதமாகும்
கடந்த 7 மாதங்களாக உலகளாவிய மந்தநிலை காரணமாக ஆடைத் தொழில் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மந்தநிலை இன்னும் 5 – 6 மாதங்களுக்கு தொடரலாம் என்றும் JAAF பொதுச்செயலாளர் தெரிவிக்கிறார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது முன்னெப்போதும் இல்லாத வகையில் 2022 இல் 7.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது, 2023 இல் மேலும் 4.2 சதவீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 2023 ஏப்ரலில் 814 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
மேற்கூறிய இந்த வீழ்ச்சிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி ஏற்கனவே அறிமுகப்படுத்திய, சௌபாக்கியா தேயிலை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் போன்றவை இன்னும் நடைமுறையில் செயல்படுத்தப்படுகின்றதா கொழும்பு ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை 2022 ஏப்ரலில் கிலோ ஒன்றுக்கு 4.25 அமெரிக்க டொலர்களில் இருந்து 2023 ஏப்ரலில் 3.91 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
தேயிலை விலை அதிகரித்த போதும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, சிறு தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பின்னடைவை நமது நாடு சந்தித்துள்ளது.
இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட “என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” போன்ற சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான சிறந்த உதவி திட்டங்கள் மீள செயல்படுத்தப்பட வேண்டும்.
நாம் பல காலமாக வலியுறுத்தி வரும் பெருந்தோட்ட துறையில் உற்பத்தி சார் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
தேயிலை தோட்டங்களில் தொழில் புரியும் பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. தேயிலை தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தோட்டங்களை நவீனமயப்படுத்தி, அந்த துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அக்கறை மிகவும் சிறிதளவே காணப்படுகிறது. இதனால், அந்த துறை மிகவும் ஆபத்து நிறைந்த தளத்திற்கு தள்ளப்படுகிறது.
பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் பெருந்தோட்ட தொழிலாளர்களை தவிர்த்து – அவர்களுடன் இணைந்து வாழும் ஏனைய பெருந்தோட்ட மலையக மக்கள் மத்தியில் விவசாயம், பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு , பூ வளர்ப்பு , அழகுக்கலை துறை, சிறு உணவு பொருட்கள் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில் முயற்சிகள் காணப்படுகின்றன.
ஆனாலும், இவற்றை முன்கொண்டு செல்வதற்கு போதிய அளவு முதலீடு அவர்களிடத்தில் இல்லை.
எனவே நான் ஏற்கனவே வலியுறுத்தியது போன்று
கிராமிய வங்கிகள் அல்லது அரசு வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அல்லது சலுகை அடிப்படையில் கடன்வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
இதன் மூலமாக எமது சமூகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடிவதோடு – வேலையில்லா பிரச்சினை காரணமாக அவர்கள் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்வதையும் கட்டுப்படுத்த முடியும்.
தொழில் வாய்ப்பு பிரச்சினை காரணமாக நாட்டில் பலர் தங்களுடைய தகுதியையும் பாராது வெளிநாடுகளுக்கு சென்று வெவ்வேறு தொழில்களை செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஆரம்ப காலத்தில் கருவா, ஏலம், மிளகு போன்றவற்றை ஏற்றுமதி செய்து பாரியளவு அந்நிய செலாவணியை பெற்ற நாடாக கருதப்பட்டது. இன்று அதற்கு என்ன நடந்துள்ளது?
இவ்வாறு வாசம் மிகுந்த கருவா, ஏலம், மிளகு, கரகாம்பு, இலவங்கப்பட்டை போன்றவற்றை ஒதுக்கி விட்டு நாற்றம் தரக்கூடிய – உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய கஞ்சா செய்கையை ஊக்குவிப்பது குறித்து இந்த அரசாங்கம் முடிவுகள் எடுப்பது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.
அடுத்த தலைமுறைக்கு தவறான முன்னுதாரணங்களை காட்டி எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
அண்மை காலங்களில் நாம் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்து பார்க்கும் போது – இலங்கையில் பயன்படுத்தி வீசப்படும். ஒரு சிறட்டையின் விலை ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் நான்கு தொடக்கம் 5 டொலர் என விற்கப்படுகிறது.
அந்த சிறட்டையில் தயாரிக்கப்படும் கரண்டி, தேநீர் கோப்பை போன்றவை பத்து தொடக்கம் 15 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, நாங்கள் கழிவு பொருட்களாக வீசி எறியப்படும் இவற்றில் இந்த அளவு வர்த்தக பயன்பாடு இருக்கிறதா ? என்பதை சிந்தித்துப் பார்த்து ! இவற்றை முறைப்படுத்தி – ஒரு முறையான செயல் திட்டத்தை தயாரித்து – சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதுடன் நாட்டில் தொழிலின்மை பிரச்சினை தலை தூக்குவதையும் தடுக்க முடியும்.
இலங்கையில் சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் இடையே தொழில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும்,
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்கள் காரணமாக – கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ஓமான் நாட்டின் முதலீட்டாளர் ஒருவர் கம்பஹா பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் இலங்கை கைத்தொழில் முதலீட்டு துறையில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது இவை எல்லாவற்றையும் செயல்படுத்த – அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து, தொழில் முயற்சிகளை அடையாளம் கண்டு – அவற்றை வரிசைப்படுத்தி – பிரதேச வாரியாக அவற்றை முன்னேற்றுவதற்கு – முறையான கடன் திட்டங்கள் – உதவி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
நாடு எப்போதும் வெளிநாட்டு கடன்களை தங்கி இருக்க முடியாது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும். உள்நாட்டிலே காணப்படும் தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
எனவே, இந்த சிறு தொழில் முயற்சிகள் மற்றும் சிறு கைத்தொழில் துறையில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து – அவற்றுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான செயல் திட்டங்கள் ஊடாக நாட்டை பலமிக்க பொருளாதார வளர்ச்சி கொண்ட நிலைக்கு முன்னேற்ற முடியும் என்பதை நான் இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகிறேன்.