முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளி எதிர்வரும் ஜுன் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
52 வயதான குறித்த சந்தேகநபர் இன்று (15.06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜூன் 08ம் திகதி இரவு முல்லேரியா, ஹல்பராவ பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் ஐந்து வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர் பொலிஸார் கைது செய்துள்ளார்.
சடலம் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 4 அடி தூரத்தில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த கண்ணாடி போத்தலின் துண்டுகளால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக குழந்தை இறந்ததாக முதலில் நம்பப்பட்ட போதிலும், கண்ணாடி துண்டுகளில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படாததால் சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர், அன்றைய தினம் கட்டுமானம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இருந்த புல் வெட்டும் தொழிலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, ஜொனதன் மார்க் பொன்சேகா என்ற ஐந்து வயது சிறுவன், புல்வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தாக்கியமையினாலேயே உயிரிழந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
புல் வெட்டும் இயந்திரத்தால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார் என்பதை மறைக்க, உடைந்த கண்ணாடி போத்தலின் துண்டுகளை சடலத்தின் அருகில் வைத்ததாக ஒப்புக்கொண்டார்.
கணவனைப் பிரிந்து வாழும் தாயார் வேலைக்குச் செல்லும் நிலையில், பகல் நேரத்தில் குழந்தையை தாத்தா பாட்டி கவனித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், சம்பவத்தன்று தாத்தா, தான் காப்பாளராக பணிபுரியும் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த புல் வெட்டும் தொழிலாளியிடம் குழந்தையை விட்டுவிட்டு சில வேலைகளை முடித்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குழந்தைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக தாத்தாவும் பின்னர் கைது செய்யப்பட்டார், அதன் பின்னர், அவர் தலா 300,௦௦௦ ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.